பிரெஞ்சு இலக்கிய வரலாறு இருபதாம் நூற்றாண்டு
முன்னோட்டப் பார்வை :
பிரான்ஸ் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிந்து இருபதாம் நூற்றாண்டு தொடங்கியபோது சமுதாயத்தில் கோலாகலமான சூழ்நிலைதான் நிலவியது .பொதுவாக ஐரோப்பிய நாடுகள் தாம் முழு வளர்ச்சி அடைந்துவிட்டதாகவும் மனித நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பதாகவும் ஓர் இன்பக்கனவில் திளைத்திருந்தன. கேட்பவர்களை முறுக்கேற்றும் ,தாளத்தை (Rhythm) முக்கியமாகக்கொண்ட இசை ,ஒபேரா மற்றும் ரஷ்யாவிலிருந்து வந்த பாலே வகை கூட்டு நடனங்கள் போன்ற இன்ப கேளிக்கைகள் மக்களின் பொழுது போக்கு அம்சமாயின .ஓவியக்கலை மிகுந்த ஏற்றம் பெற்று பல புதுமைகளைப் புகுத்தியது (cubism ) செல்வந்தர்கள் பணத்தை வாரி இறைத்து இன்பத்தை நாடினர் .நடிகைகள் நவ நாகரிக நங்கையர்கள் சமுதாயத்தின் மையமாகத் திகழ்ந்தனர் 1895 இல் கண்டு பிடிக்கப்பட்ட சினிமாக்கலை பொழுது போக்கு சாதனமாக நாடகத்துக்குப் போட்டியாக ஒரு புது சகாப்தத்தைத் தொடங்கியது
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் அன்றாட வாழ்வில்
பிரமிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தின .
சீர்மிகு முன்னேற்றம் அமைதியான வாழ்கை ஒளிமயமான எதிர்காலம் எல்லாம் கிட்டப்போகின்றன என்ற இறுமாப்பில் திளைத்திருந்த மானுடத்திற்கு பேரிடிகள் காத்திருந்தன முதல் உலகப்போர் 1917 இல் வெடித்த ரஷ்ய புரட்சி ,ஸ்டாலின் முசோலினி ஹிட்லர் பிரான்கோ போன்ற சர்வாதிகாரிகளின் அடக்குமுறை ஆட்சி இரண்டாவது உலகப்போர் ,அணுகுண்டு உண்டாக் கிய பேரழிவுகள் மனித இனம் கும்பல் கும்பலாக அழிக்கப்பட்ட படுகொலைகள் ஆகியவை இவ்வுலகை அதிர்ச்சியில் மூழ்கடித்தன ..இவை அனைத்தாலும் பிரான்ஸ் நாடு பாதிக்கப்பட்டது
வரலாற்று பேரிடிகள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தின.இவ்விளைவுகள் மனித சிந்தனை ஓட்டத்தில் அடிப்படை மாறுதல்களை விளைவித்தன.. இத்தகைய சிந்தனை ஓட்டத்தைத் தான் இந்த நுற்றாண்டின் கவிதை கதை நாடகம் எனும் இலக்கிய வடிவங்கள் பிரதிபலித்தன. இந்த பின்னணியில் தோன்றியவை தான் மீநடப்பியல்(Surrealism ) .அபத்த வியல்(Absurd)இருத்தலியல்(existentialism) புதுப்புதினம் (New Novel) ஆகியவை.